என் மஞ்சள் நிற நாயகி...

மஞ்சள் நாயகி காத்திருக்கிறாள் எனக்காக...
வெளியில் தன் பரந்த கூந்தலை உலர்த்தியபடி...

முன்பெல்லாம் அவளுக்கு முன்னெழுந்து அவளுக்காகக் காத்திருப்பேன்...
அவள் முகத்தில் விழித்துவிட்டுச் செல்வதே ஓர் ஆனந்தம் தான்!

இப்பொழுதெல்லாம்
அவளைத் தலைவிரிக் கோலத்துடன் தரிசிக்க முடிவதில்லை...

எனக்கு முன்னெழுந்து
குளித்து முடித்துத் தலை கோதியபடி இருக்கும்
அவளைச் சந்திக்கவே மனம் கொள்வதில்லை...

உச்சிப் பொழுதில் வியர்வைச் சொட்டச் சொட்ட 
கடுமையாய் அவள் உழைத்துக் கொண்டிருந்தாலும் 
முன்பெல்லாம் அவளுக்கும் எனக்கும்
தவிர்க்க முடியாதவொரு உறவு இருந்தது என்னவோ உண்மை தான்...
அதை என் பெற்றோரும் அறிந்திருந்தனர்...

இப்பொழுதோ, எனக்கும் அவளுக்குமான பரிச்சயங்களும்
ஸ்பரிச சுகங்களும் குறைந்து போய்விட்டன..
முற்றிலுமாக அற்றுப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது...
ஏனெனில் இன்னும் கூடக் காத்திருக்கிறாள்...
நான் வெளியில் வருவதற்காக...
தினம்தோறும் காலையில்...
நான் எந்த நாட்டில் இருந்தாலும்...




என் வெண்ணிற நாயகி...

வெண்ணிற நாயகி பார்த்து நாட்கள் பலவாகி விட்டன...
பதின்ம வயதின் இரவுகளில் அவளுடனான 
எனது சுகமான இரவுகள் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்ட
ஓர் உன்னதமான உறவு

எல்லாப் பெண்களும் மஞ்சள் நிற மஞ்சள் குளித்துக் காத்திருக்க
அவள் மட்டும் வெண் மஞ்சள் குளித்துப் காத்திருப்பாள்...

என் மீது அவளுக்கு ஏதேனும் கோபம் இருக்குமாவென்று தெரியவில்லை...
நான் அவளை முன்பு போல் அடிக்கடிச் சந்திக்க முடியாததற்குக் காரணம்
அவள் மீதான என் அலட்சியம் இல்லை...
வேலைப் பளு என்று கூடச் சொல்ல முடியாது...
(வேலை முடித்து வீடு வந்த பிறகு வேலைப் பளு என்னவாக இருக்க முடியும்?)

கடல் கடந்து வந்தாலும் எனக்காக என் இடம் தேடி வரும் அவளை
ஒரு முறை கூட ஏறிட்டுப் பார்க்காமல் இருந்ததற்காக 
நான் மிகவும் வெட்கப் படுகிறேன்...

அவளின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை 
இப்பொழுது என்னால் உணர முடிகிறது...

வேறு யாரையும் மணம் கொண்டோ... அல்லது வேறு எவருடனுமான
சல்லாபங்களினாலோ நான் அவளை மறந்துவிட்டதாக 
அவள் எண்ணிவிடக் கூடாது...

இப்பொழுது முடியாவிட்டாலும்
என்றேனும் ஒரு நாள் நதிக் கரையில் ஒரு வீடுகட்டி
கயிற்றுக் கட்டில் போட்டு காத்திருப்பேன்...
 அவளின் வருகைக்காக...




மௌனம்...

மௌனத்தின் விளிம்பில்
தொக்கி நிற்கிறது
வீரியமுள்ள ஒரு வார்த்தை
உரசுவதற்குக் காத்திருக்கும்
தீக்குச்சியைப் போல...

உறவு...

அறுந்துபோன பட்டத்திற்கும்
அழுகின்ற சிறுவனுக்குமிடையில்
தவிக்கிறது காற்று

நீயும் என் புலன்களும்...

மறக்க நினைக்கும் போதெல்லாம்
மறக்காமல் வருகின்றன...
உன் ஞாபகங்கள்...

நினைக்க மறந்தாலும்
மறக்க மறுக்கின்றன
ஆழ்மன உணர்வுகள்

அவ்வப்போது தலைகாட்டிப் போகும்
உன்னைப் பற்றிய நினைவுகள்

ஓய்வு நேரங்களிலும்
விழித்துக்கொள்கின்றன புலன்கள்
உன் நினைவுகளால்...

ஓய்வெடுப்பது சாத்தியமற்றதாகவே இருக்கிறது
புலன்கள் விழிப்பாய் இருக்கையில்

என்ன செய்ய
உன்னையும் புலன்களையும்?

மீண்டும்...

இன்னும் நம்பிக்கை இருக்கிறது...
இப்போது உதிர்ந்து விட்ட வெள்ளிப்பூ - மீண்டும்
இதே காம்பில் பூக்குமென்று!