பதின்ம வயதின் இரவுகளில் அவளுடனான
எனது சுகமான இரவுகள் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்ட
ஓர் உன்னதமான உறவு
எல்லாப் பெண்களும் மஞ்சள் நிற மஞ்சள் குளித்துக் காத்திருக்க
அவள் மட்டும் வெண் மஞ்சள் குளித்துப் காத்திருப்பாள்...
என் மீது அவளுக்கு ஏதேனும் கோபம் இருக்குமாவென்று தெரியவில்லை...
நான் அவளை முன்பு போல் அடிக்கடிச் சந்திக்க முடியாததற்குக் காரணம்
அவள் மீதான என் அலட்சியம் இல்லை...
வேலைப் பளு என்று கூடச் சொல்ல முடியாது...
(வேலை முடித்து வீடு வந்த பிறகு வேலைப் பளு என்னவாக இருக்க முடியும்?)
கடல் கடந்து வந்தாலும் எனக்காக என் இடம் தேடி வரும் அவளை
ஒரு முறை கூட ஏறிட்டுப் பார்க்காமல் இருந்ததற்காக
நான் மிகவும் வெட்கப் படுகிறேன்...
அவளின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை
இப்பொழுது என்னால் உணர முடிகிறது...
வேறு யாரையும் மணம் கொண்டோ... அல்லது வேறு எவருடனுமான
சல்லாபங்களினாலோ நான் அவளை மறந்துவிட்டதாக
அவள் எண்ணிவிடக் கூடாது...
இப்பொழுது முடியாவிட்டாலும்
என்றேனும் ஒரு நாள் நதிக் கரையில் ஒரு வீடுகட்டி
கயிற்றுக் கட்டில் போட்டு காத்திருப்பேன்...
அவளின் வருகைக்காக...